காசியில் உள்ள கர்நாடக பக்தர்கள் கூடம் விரைவில் புனரமைக்கப்படும்-மந்திரி சசிகலா ஜோலே
காசியில் உள்ள கர்நாடக பக்தர்கள் கூடம் விரைவில் புனரமைக்கப்படும் என்று மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு: காசியில் உள்ள கர்நாடக பக்தர்கள் கூடம் விரைவில் புனரமைக்கப்படும் என்று மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் கூடம் ஆய்வு
காசியில் உள்ள கர்நாடக பக்தர்கள் கூடத்திற்கு நேற்று அறநிலையத்துறை மந்திரி சசிகலா ஜோலே சென்றார். அங்கு தங்கி இருக்கும் கர்நாடக பக்தர்களை சந்தித்து அவர் பேசினார். மேலும் பக்தர்களின் கூடத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்தும் கர்நாடக அதிகாரிகளுடன், மந்திரி சசிகலா ஜோலே ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து மந்திரி சசிகலா ஜோலே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்
காசியில் இருக்கும் கர்நாடக பக்தர்களின் கூடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினேன். இந்த பக்தர்கள் கூடம் கடந்த 1928-ம் ஆண்டு மைசூரு நால்வடி ஸ்ரீ கிருஷ்ண ராஜேந்திர உடையாரால் கட்டப்பட்டது. அவர் தனது சொந்த பணத்தில் பக்தர்கள் கூடத்தை கட்டி இருந்தார். 2-வது கட்டிடம் கடந்த 2002-ம் ஆண்டு கட்டப்பட்டு இருந்தது. தற்போது கர்நாடகத்தில் காசி மற்றும் வாரணாசிக்கு அதிகமான பக்தர்கள் யாத்திரைக்காக வருகை தருகிறார்கள். அரசு சார்பில் சிறப்பு ரெயிலிலும் பெங்களூருவில் இருந்து காசிக்கு வருகிறது.
நாளுக்கு நாள் கர்நாடகத்தில் இருந்து காசிக்கு வரும் பக்தர்கள் அதிகமாகி இருப்பதால், காசியில் உள்ள கர்நாடக பக்தர்களின் கூடத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பக்தர்கள் கூடத்தில் விரைவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்படும். இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படும். பக்தர்களை கவனத்தில் கொண்டே இந்த கூடத்தில் வளர்ச்சி பணிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.