எச்.டி.கோட்டை தாலுகாவில் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

எச்.டி.கோட்டை தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-05-13 18:45 GMT

மைசூரு-

எச்.டி.கோட்டை தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா அம்பாப்புறா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி அம்பாப்புறா, கஞ்சமள்ளி ஆகிய கிராமங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் வீட்டை விட்டு வெளிேய வர முடியாமல் அச்சத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தப்பகுதியில் சிறுத்தை ஒன்று தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆடு, மாடு, நாய்களை அடித்து கொன்று வந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

சிறுத்தை கூண்டில் சிக்கியது

அதன்படி வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அம்பாப்புறா பகுதியில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய அந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது.

இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள்,அங்கு திரண்டு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் அங்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை லாரியில் ஏற்றி நாகரஒலே வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர். கூண்டில் சிக்கியது 4 வயது ஆண் சிறுத்தை என வனத்துறை அதிகாரி பசவராஜ் தெரிவித்தார். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்