தார்வாரில் 2 பெண்களிடம் ரூ.33 லட்சம் மோசடி
தார்வாரில் 2 பெண்களிடம் ரூ.33 லட்சம் மோசடி சம்பவம் நடந்து உள்ளது.;
உப்பள்ளி-
தார்வார் (மாவட்டம்) டவுன் கன்னியா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், சங்கீதாவின் செல்போன் எண்ணிற்கு மர்மநபர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவரிடம் பணம் இரட்டிப்பு செய்வதாக கூறினர். இதனை நம்பிய சங்கீதா பல்வேறு தவணைகளாக ரூ.15 லட்சத்து 29 ஆயிரம் வரை அனுப்பி உள்ளார். ஆனால் அவர்கள் கூறிய இரட்டிப்பு தொகையை சங்கீதாவுக்கு வழங்கவில்லை.
இதையடுத்து அவர் மர்மநபர்கள் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்- ஆப் என வந்துள்ளது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டது சங்கீதாவுக்கு தெரியவந்தது.
இதேபோல் உப்பள்ளி டவுன் கொப்பா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். மஞ்சுளா செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில், உங்களுக்கு ஆன்லைன் லாட்டரியில் ரூ.8½ லட்சம் பரிசு விழுந்துள்ளது என இருந்துள்ளது. இதையடுத்து அந்த லிங்கில் சென்று வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மஞ்சுளா தெரிவித்தார். இதையடுத்து மஞ்சுளா வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்து 79 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் கிடைத்தது. அதனை மர்மநபர்கள் நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த 2 சம்பவங்கள் குறித்து உப்பள்ளி சைபர் கிரைம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.