தட்சிண கன்னடாவில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்குபதிவு நடந்து முடிந்தது.

Update: 2023-05-10 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்குபதிவு நடந்து முடிந்தது.

வெற்றிகரமான தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலையொட்டி மாநில முழுவதும் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றினர். ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்த தேர்தல் வெற்றிகரமாக நடந்தது. கால நிலையை கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாக்களிப்பதற்காக மக்கள் காலை 6 மணிக்கே வந்து காத்திருந்தனர்.

குறிப்பாக மல்லிகட்டே வாக்குச்சாவடியில் பலர் முன்கூட்டியே திரண்டு வந்து நின்று வாக்களித்தனர். இந்த தேர்தலையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்களுக்கு, ஆண்டுகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிங்க் நிற வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல மாற்று திறனாளிகள், முதியவர்களுக்கு வாக்களிக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

அமைதியாக நடந்தது

மங்களூரு பம்ப்வெல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தாமதமானது. இதே தொகுதியில் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியிலும் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் குறைவாக இருந்ததே இந்த கால தாமதம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதல் அதிகாரிகளை வரவழைத்து, வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல நக்சலைட்டுகள் ஆதிகம் அதிகம் என்று கூறப்பட்ட பெல்தங்கடி தாலுகா குதலூரில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் மந்திரி யூ.டி.காதர் உள்ளாலில் தனது வாக்கை பதிவு செய்தார். பண்ட்வால் தொகுதிக்குட்பட்ட மையத்தில் ரமனாத்ராய் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பா.ஜனதா மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் பண்ட்வால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாக்களித்தார். இதேபோல பல அரசியல் பிரமுகர்கள், வி.ஐ.பி.க்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்