தட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை கலெக்டர் உத்தரவு

தொடர் கனமழையால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் முல்லை முகிலன் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2023-07-05 00:15 IST

மங்களூரு-

தொடர் கனமழையால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் முல்லை முகிலன் உத்தரவிட்டுள்ளார்.

மங்களூருவில் கனமழை

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் போதிய மழை பெய்யாமல் உள்ளது. ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. மாவட்டத்தில் மங்களூரு, மூடபித்ரி, பண்ட்வால் பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் மங்களூரு நகரே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. நகரில் முல்கி, உல்லால், பம்ப்வெல் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேம்பால சாலை தண்ணீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

3 தாலுகாக்களுக்கு விடுமுறை

இந்த நிலையில் நேற்றும் மாவட்டத்தில் மங்களூரு, மூடபித்ரி, பண்ட்வால் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், அந்த பகுதிகளுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் மங்களூரு, மூடபித்ரி, பண்ட்வால் ஆகிய 3 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் முல்லை முகிலன் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இதுகுறித்து கலெக்டர் முல்லை முகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கொட்டிய கனமழையால் மங்களூரு, மூடபித்ரி, பண்ட்வால் தாலுகாக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மங்களூரு, மூடபித்ரி, பண்ட்வால் ஆகிய 3 தாலுகாக்களில்  நேற்று, நாளை (புதன்கிழமை) பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றன.

நீர் தேங்கி கிடக்கும் தாழ்வான பகுதிகள், குளங்கள், ஆறுகள், கடற்கரைகளுக்கு குழந்தைகள் செல்வதை பெற்றோர் தடுக்க வேண்டும். அரபிக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அதிகாரிகள் தங்கள் மைய அலுவலகத்தில் இருக்குமாறும், பேரிடர் மேலாண்மையை கட்டாயம் பின்பற்றும்படியும் உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரி 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பாதிப்புகளை தடுக்க அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்