தட்சிண கன்னடாவில் உள்ள கோவில்களில், ஆன்லைன் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்
தட்சிண கன்னடாவில் உள்ள கோவில்களில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூரு;
ஆன்லைன் மூலம்...
கர்நாடகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான இந்து கோவில்கள் உள்ளன. கொரோனா காலத்தில் கோவில்கள் மூடப்பட்டு பின்பு மீண்டும் திறக்கப்பட்டன. அப்போது பக்தர்கள் வரிசையில் நின்று உண்டியல்களில் காணிக்கை செலுத்தவும், சாமி தரிசனம் செய்யவும், சிறப்பு பூஜைகள் நடத்தவும், பிரசாதம் பெறவும் சிரமம் ஏற்படும் என்று கருதி இந்து சமய அறநிலையத்துறையும், அரசும் ஒரு முடிவு எடுத்தது. அதன்படி இ-சேவை எனப்படும் ஆன்லைன் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது, சிறப்பு பூஜையில் ஈடுபடுவதும், மேலும் காணிக்கை செலுத்துவது போன்ற வசதிகள் செய்யப்பட்டது.
இந்த வசதிகள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 'ஏ' பிரிவு கோவில்களில் அமலில் உள்ளது. இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் இதுபோன்ற வசதிகளை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை முடிவு செய்தன.
மங்களாதேவி கோவில்
அதன்படி மங்களூருவில் உள்ள மங்களாதேவி கோவிலில் இந்த ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில், குக்கே சுப்பிரமணியா கோவில், புத்தூர் மகாலிங்கேஸ்வரா கோவில், சகஸ்ரலிங்கேஸ்வரா கோவில் ஆகிய கோவில்களில் இந்த வசதிகள் உள்ளன. இதுதவிர ராஜராஜேஸ்வரி கோவில், போலாலி பாப்பாநாடு துர்கா பரமேஸ்வரி கோவில், பனோலிபெயில் கல்லூர்தி கோவில், கத்ரி மஞ்சுநாதா கோவில், குடுப்பு அனந்தபத்மநாபா கோவில் ஆகிய கோவில்களிலும் இந்த ஆன்லைன் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
இந்த ஆன்லைன் வசதிகள் பெரும் உதவியாக உள்ளதாகவும், பக்தர்கள் தாங்கள் இருந்த இடங்களில் இருந்தே சாமி தரிசனம், சிறப்பு பூஜையில் ஈடுபட முடிகிறது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கியூ-ஆர்-கோடு
மேலும் அவர்கள் கூறுகையில், 'பக்தர்கள் ஆன்லைன் மூலம் சாமி தரிசனம் செய்து காணிக்கைகள் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான கட்டணங்களை செலுத்துவதால் கோவிலில் கூட்டம் குறைகிறது. ஆன்லைன் பக்தர்களுக்கான பிரசாதம் கோவில் நிர்வாகத்தால் பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் உண்டியலில் காணிக்கை செலுத்த வரிசையில் நிற்காமல் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ள 'கியூ-ஆர்-கோடை' ஸ்கேன் செய்து அதன்மூலம் எளிதாக காணிக்கைகளை செலுத்தி வருகிறார்கள்.
இதன்மூலம் ஒவ்வொரு கோவிலிலும் கூட்டத்தின் அளவை பொறுத்து ஒருநாளைக்கு தலா ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வசூல் ஆகிறது' என்று கூறினர்.