பெலகாவியில் இரட்டை கொலை தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் பணிஇடைநீக்கம்-போலீஸ் கமிஷனர் நடவடிக்கை
பெலகாவியில் இரட்டை கொலை தொடர்பாக 2 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பெலகாவி:
பெலகாவி தாலுகா சுலேபாவி கிராமத்தில் கடந்த 5-ந் தேதி திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின் போது வாலிபர்கள் 2 கும்பலமாக பிரிந்து ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் சுலேபாவி கிராமத்தை சேர்ந்த மகேஷ் (வயது 24), பிரகாஷ் (25) ஆகிய 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து மாரிஹாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சுலேபாவி கிராமத்தை சேர்ந்த சசிகாந்த், யம்மேஷ், மஞ்சுநாத், தேவப்பா, சந்தோஷ், பரமண்ணா ஆகிய 6 பேரை மரிஹாலா போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையே 2 கும்பல் மோதிய போது பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக மாரிஹாலா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் தலேவாடா, பாலகண்டவரா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா உத்தரவிட்டுள்ளார்.