சிக்கமகளூரு டவுனில் மாட்டிறைச்சி விற்பனை கூடம் இடிப்பு
சிக்கமகளூரு டவுனில் மாட்டிறைச்சி விற்பனை கூடத்தை இடிப்பு நகரசபை தலைவர் வேணுகோபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு டவுன் திப்பு நகர் பகுதியில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கூடம் செயல்பட்டு வருவதாக நகரசபை தலைவர் வேணுகோபாலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகரசபை தலைவர் வேணுகோபால் உத்தரவின்பேரில் ஊழியர்கள் போலீசாருடன் திப்பு நகருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த முகமது என்பவர், அங்கு மாட்டிறைச்சி கூடம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நகரசபை தலைவர் வேணுகோபால் உத்தரவின்பேரில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மாட்டிறைச்சி கூடத்தை இடித்து அகற்றினர்.
இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதுகுறித்து நகரசபை தலைவர் வேணுகோபால் கூறுகையில், சிக்கமகளூரு நகரில் சட்டவிரோதமாக நடக்கும் மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறேன். இந்த நடவடிக்கை தொடரும் என்றார்.