சார்மடி மலைப்பகுதியில் அரசு பஸ்- லாரி மோதல்; பயணிகள் உயிர் தப்பினர்
சார்மடி மலைப்பகுதியில் அரசு பஸ்- லாரி மோதிய விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர். மேலும் மரம் முறிந்து விழுந்ததால் நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியது.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சார்மடி மலைப்பகுதி சிக்கமகளூருவில் இருந்து மங்களூருவை இணைக்கக்கூடிய முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையில் நேற்றுமுன்தினம் இரவு தர்மஸ்தலாவிலிருந்து வடகர்நாடகம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அதே சாலையில் சிக்கமகளூருவில் இருந்து மங்களூரு நோக்கிச் சென்ற லாரி ஒன்றும், அரசு பஸ்சும் திடீரென நேருக்கு நேர் ேமாதி கொண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகளும், லாரி டிரைவரும் உயிர்தப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் நேற்று காலை சிக்கமகளூருவில் இருந்து மங்களூருவுக்கு ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சார்மடி மலைப்பாதையில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் ஆம்புலன்ஸ் செல்லமுடியாமல் நின்றது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் வந்து மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.