பீகாரில் பயங்கரவாத தாக்குதல் வழக்கில்கர்நாடகம், கேரளாவில் 5 பேர் கைது
பீகார் மாநிலம் புல்வாரி ஷெரீப் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கர்நாடகம், கேரளாவில் 5 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி அனுப்பியது அம்பலமாகி உள்ளது.
மங்களூரு-
பாட்னாவில் பயங்கரவாத தாக்குதல்
பீகார் மாநிலம் பாட்னா அருகே புல்வாரி ஷெரீப் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், புல்வாரி ஷெரீப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு கர்நாடகம், கேரளாவில் இருந்து ரூ.25 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.
5 பேர் கைது
இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கர்நாடகம் மற்றும் கேரளாவுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பானேமங்களூருவை சேர்ந்த முகமது சினான், இக்பால், சஜிபமூடாவை சேர்ந்த சர்ப்ராஸ் நவாஸ், புத்தூரை சேர்ந்த அப்துல் ரபீக் மற்றும் கேரள மாநிலம் மஞ்சேஸ்வர் அருகே குஞ்சத்தூரில் வசிக்கும் அபித் ஆகிய 5 பேர், புல்வாரி ஷெரீப்பில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்களை பாட்னாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.25 கோடி
கைதான 5 பேரும் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஹவாலா முறையில் பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்பு வந்ததும் தெரிந்தது. அதாவது, முகமது சினான் மற்றும் சர்ப்ராஸ் நவாஸ் ஆகியோர் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்களின் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ெவளிநாடுகளில் இருந்து வரும் பெரும் தொகையை கையாண்டு வந்துள்ளனர்.
அவர்கள், புல்வாரி ஷெரீப் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.25 கோடி வரை பணத்தை டெபாசிட் செய்ததும் தெரியவந்தது. அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.