பெல்தங்கடி தாலுகாவில் மானை வேட்டையாடிய 3 பேர் கைது
பெல்தங்கடி தாலுகாவில் மானை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.;
மங்களூரு-
பெல்தங்கடி தாலுகாவில் மானை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
வனவிலங்குகள் வேட்டை
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை மர்மநபர்கள் வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் பட்ரமே வனப்பகுதியில் வனவிலங்குகளை மர்மநபர்கள் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் பட்ரமே பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதன் வழியாக வந்த காரை வனத்துறை அதிகாரிகள் மறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை வனத்துறையினர் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 4 பேர் தப்பியோடினர். இதனை சுதாரித்துக்கொண்ட வனத்துறை அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்தனர்.
3 பேர் கைது
அதில், ஒருவர் தப்பி சென்றார். பின்னர் வனத்துறை அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அதில், மானை வேட்டையாடி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பட்ரமே பகுதியை சேர்ந்த சுதேஷ், புனித், கோட்டியப்பகவுடா என்பதும், அவர்கள் 3 பேரும் பட்ரமே வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து வேட்டையாடிய மான், நாட்டுத்துப்பாக்கி, காரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய ேலாகேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.