ஆனேக்கல்லில் ரூ.10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்கம்
ஆனேக்கல்லில் ரூ.10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கியது.
ஆனேக்கல்;
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகாவில் உள்ளது முத்தநல்லூர் கிராம பஞ்சாயத்து. இந்த பகுதியில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலின் போது உறுப்பினர் எஸ்.கே.கவுரிஷ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி அந்த கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட சிகேன அக்ரஹாரா, விநாயகாநகர் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதை தொடங்கி வைத்து கிராம பஞ்சாயத்து உறுப்பினர் எஸ்.கே.கவுரிஷ் கூறியதாவது:- ரூ.10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிற பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறும். இதற்காக எம்.எல்.ஏ மற்றும் மந்திரிகளிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கிறேன். அவர்கள் ஆலோசனைப்படி வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறும். குறிப்பாக சாலைகள், சாக்கடை கால்வாய், தூய்மையான குடிநீர், மின் விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.