"அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்" - அஜித் பவார் திட்டவட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறி வருகிறது என்று துணை முதல்-மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.;

Update:2023-07-02 17:47 IST

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். அவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது அமைந்துள்ள அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. மராட்டியத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்தையும் செய்வோம். சில எம்.எல்.ஏ.க்கள் வெளியூரில் இருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஆனால் அவர்கள் அனைவரிடமும் பேசினேன், அவர்கள் எங்கள் முடிவுக்கு ஒப்புக்கொண்டனர். அனைத்து எம்எல்ஏக்களும் என்னுடன் உள்ளனர். நாங்கள் ஒரு கட்சியாக இங்கே இருக்கிறோம். எங்கள் கட்சிக்கு 24 வயதாகிறது, இளம் தலைமை முன்வர வேண்டும்.

எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை, மராட்டியத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம். அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் திருப்தி அடைந்துள்ளனர். வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்.

பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறி வருகிறது. பிரதமர் மோடி மற்ற நாடுகளிலும் பிரபலமாகி வருகிறார். அனைத்து தரப்பு மக்களும், அனைத்து நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள் மற்றும் அவரது தலைமையைப் பாராட்டுகிறார்கள். வரும் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களில் பாஜகவுடன் இணைந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்