மது விருந்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர், கத்தியால் குத்தி படுகொலை
மது விருந்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
கோலார் தங்கவயல்:
பிறந்தநாள் கொண்டாட்டம்
சிக்பள்ளாப்பூர் புறநகர் நரசிம்மா ஆஷ்ரயா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துர்கேஷ்(வயது 26). இவர், சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெங்களூரு இணைப்பு சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு வைத்து அவர்கள் மதுகுடிக்க சென்றுள்ளனர். இரவு வெகுநேரம் ஆனதால் ஓட்டலை மூடப்போவதாக அதன் உரிமையாளர், அவர்களிடம் கூறி உள்ளார்.
கத்திக்குத்து
இதனால் அவர்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அங்கு வைத்து குடித்துள்ளனர். அப்போது மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், அவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் துர்கேசின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் துர்கேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து நேற்று காலை அவ்வழியே சென்ற சிலர் துர்கேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு, சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் துர்கேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துர்கேசை கொலை செய்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.