பாலியல் வழக்கில் கைதான சித்ரதுர்கா மடாதிபதி சிறையில் அடைப்பு
பாலியல் வழக்கில் கைதான சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்ரதுர்கா: பாலியல் வழக்கில் கைதான சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் வழக்கு
சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் மீது 2 மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் அவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து சித்ரதுர்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அனில் குமார் தலைமையிலான போலீசார் சிவமூர்த்தி முருகா சரணருவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும் அவர் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
சிறையில் அடைப்பு
இதனால் ேமலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இந்த நிலையில் நேற்றுடன் மடாதிபதியின் போலீஸ் காவல் முடிந்தது. இதையடுத்து போலீசார் அவரை சித்ரதுர்கா 2-வது கூடுதல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவிடம் இன்னும் விசாரிக்க வேண்டி உள்ளதாகவும், போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்றும் அனுமதி கோரினர்.
இதையடுத்து நீதிபதி, மடாதிபதியை 9 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும் வருகிற 19-ந்தேதி மீண்டும் மடாதிபதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு சித்ரதுர்கா சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதற்கிடையில் மடாதிபதிக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மடாதிபதி தரப்பில் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்ற போலீசார் உடல் நிலையை கவனித்து பின்னர் பெங்களூரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.