தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது-மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.;

Update:2023-08-11 09:59 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சாமானிய மக்களை பாதிக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்த மந்திரிகள் குழு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மராட்டியம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் பிற கூட்டுறவு சங்கங்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. அந்த மாநிலங்களில் இதுவரை 8.84 லட்சம் கிலோ தக்காளியை வினியோகித்துள்ளது. இது தொடரும், மேலும் அதிகரிக்கப்படும். இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நேபாளத்தில் இருந்து இறக்குமதியை அனுமதித்துள்ளோம். முதல் பகுதி வாரணாசி, கான்பூர், லக்னோவை இந்த வாரம் சென்றடையும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்