இந்து கோவில்களில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; புதுச்சேரி முதல்-அமைச்சரிடம் தி.மு.க எம்.எல்.ஏ. கோரிக்கை
புதுச்சேரி இந்து கோவில்களில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் புதுச்சேரி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.;
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆன்மிக பூமியான புதுச்சேரியில் அதிக அளவிலான கோவில்கள் உள்ளன. இங்கு கோவில்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் தனியார் அறங்காவலர் குழுக்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது. ஒரு சில கோவில்களில் வருவாய் உள்ளது. அதனால் அவற்றை பராமரிப்பது எளிதாக உள்ளது. பெரும்பாலான கோவில்கள் வருவாய் இல்லாததால் அன்றாட செலவீனங்களுக்கு ஆலய நிர்வாகிகள் சிரமப்படுகின்றனர். கோவில்களுக்கு மின்கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வரும் காலத்தில் மின்துறை தனியார் மயமாக்கப்படலாம் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. தனியார் மயமாக்கும் பட்சத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என பரவலான கருத்தும் உள்ளது. எனவே கோவில்கள் தங்கள் தேவைக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டால் மின்கட்டணத்தில் பெரிய அளவு மிச்சமாகும். கோவில்களில் சூரிய மின்உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கு 50 சதவீதம் மானிய தொகையை மத்திய அரசு வழங்குகிறது. மீதம் உள்ள 50 சதவீதம் மானிய தொகையை மாநில அரசின் அறங்காவல் துறை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.