ஆசிய பல்கலை கழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம்
ஆசிய பல்கலை கழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலில் இந்தியாவின் 19 பல்கலை கழகங்கள் இடம் பெற்று உள்ளன.
புதுடெல்லி,
சர்வதேச தரவரிசை கழகங்களில் ஒன்றான கியூ.எஸ். (குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்) அமைப்பு 2023-ம் ஆண்டுக்கான ஆசிய பல்கலை கழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியாவின் 19 பல்கலை கழகங்கள் இடம் பெற்று உள்ளன.
இதில் மும்பை ஐ.ஐ.டி. மீண்டும் இந்த ஆண்டில் 40-வது இடம் பிடித்து உள்ளது. டெல்லி ஐ.ஐ.டி. 46-வது இடமும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. 52-வது இடமும் பிடித்து உள்ளன.
தமிழகத்தின் சென்னை ஐ.ஐ.டி. 53-வது இடம் பிடித்து உள்ளது. இதுதவிர வேலூர் வி.ஐ.டி. 173-வது இடமும், அண்ணா பல்கலைக்கழகம் 185-வது இடமும் பிடித்து உள்ளன.
தொடர்ந்து காரக்பூர் ஐ.ஐ.டி. 61-வது இடமும், கான்பூர் ஐ.ஐ.டி. 66-வது இடமும், டெல்லி பல்கலைக்கழகம் 85-வது இடமும் பிடித்து டாப் 100 கல்வி நிலையங்களின் வரிசையில் இடம் பெற்று உள்ளன.
இவற்றில் இந்தியாவின் 8 பல்கலை கழகங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் முன்னேற்றம் அடைந்து உள்ளன. அனைத்து இந்திய பல்கலை கழகங்களும் கல்வி பொது மதிப்பீடு மற்றும் சர்வதேச ஆராய்ச்சி பணியில் மேம்பாடு அடைந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.