மோடி அரசு சில துறைகளில் முன்னணியில் இருக்கிறது என்றால் காங்கிரஸ் அரசின் தோள் மீது நிற்பதே காரணம் - ப.சிதம்பரம் பதில்
மோடி அரசு சில துறைகளில் முன்னணியில் இருக்கிறது என்றால் காங்கிரஸ் அரசின் தோள் மீது நிற்பதே காரணம் என்று நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு ஆங்கில பத்திரிகையில் கட்டுரை எழுதி இருந்தார். அதில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு குறைவாக இருப்பதாக கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு பதிலாக, கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதிலேயே கவனமாக இருப்பதாகவும், 15-க்கு மேற்பட்ட வழக்குகளில் தீவிரமாக வாதாடியும் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வியே கிடைத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அதற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
மோடி அரசின் சாதனைகள் குறித்து மத்திய நிதி மந்திரி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அவர் சுட்டிக்காட்டிய பல சம்பவங்கள் உண்மைதான். 5 அல்லது 10 ஆண்டுகள் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் அதை செய்திருக்கும் என்பதுதான் உண்மை.
மோடி அரசை எதிர்க்கட்சிகள் கோர்ட்டுக்கு இழுத்து, தோல்வி அடைந்ததாக 5 வழக்குகளை நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவற்றில் 3 வழக்குகளை பற்றி அவர் சொன்னது தவறு.
உதாரணமாக, 'முத்தலாக்' தடைக்காக நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு முன்பே, முத்தலாக் சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பான 370-வது பிரிவு பற்றிய வழக்கு, இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஜி.எஸ்.டி. தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
பால், தேன், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக நிதி மந்திரி கூறியிருக்கிறார். அந்த முன்னணி இடம், பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றது. அதை தொடர்ந்து தக்க வைத்துள்ளோம்.
வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதையும் சாதனை பட்டியலில் நிதி மந்திரி சேர்த்துள்ளார். ஆதார் திட்டத்தை கருவாக்கி, உருவாக்கி, அமல்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்பதை அவர் மறந்து விட்டார். முதல்முறையாக வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தியதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான்.
11 கோடியே 72 லட்சம் கழிப்பறைகள் கட்டியதாக நிதி மந்திரி பெருமை பேசுகிறார். அவற்றில் எத்தனை கழிப்பறைகள் தண்ணீர் இல்லாமல் பயன்படுத்தாமலும், பயன்படுத்த முடியாமலும் இருக்கின்றன என்பது பற்றிய தனது அரசின் அறிக்கைகளை அவர் படிக்க வேண்டும்.
எல்லா அரசும் தனக்கென சாதனை பட்டியல் வைத்திருப்பது போலவே மோடி அரசும் வைத்திருக்கிறது. சில துறைகளில் மோடி அரசு முன்னணியில் இருக்கிறது என்றால், அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோள்களில் நிற்பதே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.