டி.கே.சிவக்குமாரின் பங்கு குறித்து ஓரிரு நாளில் ஆவணங்களை வெளியிடுவேன்

நைஸ் திட்ட முறைகேட்டில் டி.கே.சிவக்குமாரின் பங்கு குறித்து ஓரிரு நாளில் ஆவணங்களை வெளியிடுவேன் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

Update: 2023-08-20 21:02 GMT

பெங்களூரு:-

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஒப்பந்தம் போடப்பட்டது

நைஸ் ரோடு திட்டத்தில் டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் கொள்ளையடித்த நிலங்கள் குறித்த ஆவணங்களை ஓரிரு நாளில் வெளியிடுகிறேன். டி.கே.சுரேஷ் எம்.பி. ஆவதற்கு முன்பு அவரது சொத்து எவ்வளவு?. இப்போது அவருடைய சொத்து எவ்வளவு?. இவை எல்லாம் எனக்கும் தெரியும். நைஸ் திட்டத்திற்கு தேவேகவுடா முதல்-மந்திரியாக இருந்தபோது தான் அனுமதி வழங்கப்பட்டது. நான் இல்லை என்று சொல்லவில்லையே.

நல்ல சாலை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ஒப்பந்தம் போடப்பட்டது. தேவேகவுடா எண்ணப்படி அந்த சாலை அமைந்து இருந்தால் ஆசியாவிலேயே பெங்களூரு, மைசூரு நகரங்கள் பெரிய அளவில் வளர்ந்து இருக்கும். ஆனால் பெங்களூருவை சுற்றியுள்ள விவசாயிகளின் நிலங்களை கொள்ளையடித்தனர். இதில் டி.கே.சிவக்குமாரின் பங்கு எவ்வளவு?.

வருத்தம் இல்லை

ராமநகரின் வளர்ச்சிக்கு நான் நிறைய திட்டங்களை வழங்கினேன். ஆனால் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது. அந்த மக்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ராமநகருக்கு ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கொண்டு வந்தேன். மேலும் கனகபுராவில் மருத்துவ கல்லூரி அமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கினேன்.

அதன் பிறகு வந்த பா.ஜனதா அரசு அந்த கல்லூரியை சிக்பள்ளாப்பூருக்கு கொண்டு சென்றது. மாவட்ட தலைநகரில் தான் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும். ஆனால் தாலுகாவில் அந்த மருத்துவ கல்லூரியை தொடங்குகிறார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்