தீவிர அரசியலில் சேர விரும்பினேன்- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா
தீவிர அரசியலில் சேரத்தான் விரும்பினேன், ஆனால் விதி வேறாகி விட்டது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா கூறினார்.;
ராஞ்சி,
தலைமை நீதிபதி பேச்சு
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த நீதிபதி சத்ய பிரதா சின்கா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தீவிர அரசியலில் சேர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் விதி வேறாகி விட்டது. நான் கடினமாக உழைத்த ஒன்றை விட்டுவிடுவது என எடுத்த முடிவு எளிதான ஒன்று அல்ல.
வழக்குகள் தேங்க காரணம் என்ன?
காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பாததும், நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்தாததும்தான் நமது நாட்டில் கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்கிக்கிடப்பதன் காரணம் ஆகும்.
பல நேரங்களில் நான் இந்த பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இருக்கிறேன். நீதித்துறை உட்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று வலுவாக கூறி வந்திருக்கிறேன்.
நீதிபதிகள் மீது தாக்குதல்
சமீப காலமாக நீதிபதிகள் தாக்குதலுக்கு ஆளாகிற சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிற இந்த சமூகத்தில்தான் எந்த பாதுகாப்பும் அல்லது பாதுகாப்பு உறுதியும் இல்லாமல் நீதிபதிகள் வாழ வேண்டியதிருக்கிறது.
அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், போலீஸ் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு, அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர்கூட வழங்கப்படுகிறது. ஆனால் இத்தகைய பாதுகாப்பு நீதிபதிகளுக்கு அளிக்கப்படுவதில்லை.
எதிர்காலம்
இந்த நாட்டில் எதிர்கால நீதித்துறை எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த எனது கவலைகளை பதிவு செய்யவும் நான் தவற மாட்டேன்.
நீதித்துறை உள்கட்டமைப்பு சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் சில முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இருந்தாலும், வருங்கால சவால்களுக்கு ஏற்ற வகையில் நீதித்துறையை தயார் படுத்துவதற்கென்று எந்த உறுதியான திட்டம் குறித்தும் நான் கேள்விப்படவில்லை.
நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகளால்தான் நீதித்துறை உள்கட்டமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.