மத்திய அரசு அரசியல் செய்ய வேண்டாம் என அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன்
கர்நாடகத்திற்கு மத்திய அரசு அரிசி வழங்கும் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய மந்திரி அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:-
அமித்ஷாவுடன் சந்திப்பு
முதல்-மந்திரி சித்தராமையா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றிருந்தார். நேற்று முன்தினம் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவர் சந்தித்து பேசி இருந்தார். அதன்பிறகு, நேற்று முன்தினம் இரவு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேசி இருந்தார். அப்போது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்து முதல்-மந்திரியாகி இருப்பதால், சித்தராமையாவுக்கு அமித்ஷா வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு, அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்ற கர்நாடகத்திற்கு, மத்திய அரசு முதலில் அரிசி வழங்குவதாக தெரிவித்து விட்டு, மறுநாளே அரிசி தர மறுத்திருந்தது. இந்த விவகாரம் குறித்தும், கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை வழங்கும்படியும் மத்திய மந்திரி அமித்ஷாவிடம் முதல்-மந்திரி சித்தராமையா கோரிக்கை விடுத்திருந்தார். டெல்லியில் நேற்று முன்தினம் இரவு தங்கிய அவர், நேற்று மதியம் பெங்களூரு திரும்பினார். முன்னதாக டெல்லியில் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் செய்ய வேண்டாம்
மத்திய மந்திரி அமித்ஷாவை நேற்று முன்தினம் இரவு(அதாவது நேற்று) சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பின் போது அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கர்நாடகத்திற்கு மத்திய அரசு வழங்குவதாக கூறிவிட்டு, பின்னர் மறுத்து விட்டது குறித்து பேசினேன். அதே நேரத்தில் கர்நாடகத்திற்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்ய வேண்டாம் என்றும், பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனே். அப்போது மத்திய உணவுத்துறை மந்திரியிடம் பேசுவதாக அமித்ஷா கூறினார்.
இதுதவிர தற்போது கர்நாடகத்திற்கு 2 ஐ.ஆர்.பி. பட்டாலியனை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இன்னும் 2 பட்டாலியன் கொடுக்கும்படி அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மத்திய அரசு முதலில் அரிசி கொடுப்பதாக கூறிவிட்டு தற்போது மறுப்பதால் தான் அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்கள், பஞ்சாப், சத்தீஸ்கார் உள்ளிட்ட பிற மாநில அரசுகளுடனும் அரிசி வாங்குவது தொடர்பாக கர்நாடக அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.