'அரசின் இலவச மின்சாரம் எனக்கு வேண்டாம்'; மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தகவல்
'அரசின் இலவச மின்சாரம் எனக்கு வேண்டாம்' என்று மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்துள்ளார்.
உப்பள்ளி:
கா்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி, பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம் என்பன உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு வாக்குறுதியாக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில் இலவச மின்சார திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசின் இலவச திட்டங்கள் தேவை இல்லாதவர்கள், அதுபற்றி அரசிடம் ெதரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மேல்சபை தலைவராக இருக்கும் பா.ஜனதாவை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி, தனக்கு அரசின் இலவச மின்சாரம் வேண்டாம் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், கெஸ்காம் (உப்பள்ளி மின்சார வாரியம்) இயக்குனருக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், கர்நாடக அரசின் 200 யூனிட் இலவச மின்சாரம் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ வேண்டாம். கர்நாடக அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி 200 யூனிட் மின்சார திட்டம் அமல்படுத்தியதற்கு காங்கிரஸ் அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த திட்டம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.