நானே தந்தை... நானே தாய்...! குழந்தைக்காக காத்திருக்கும் கர்ப்பிணி திருநங்கை...!

ஜியாவின் அன்பும், தாயாக வேண்டும் என்ற அவரது தீவிர ஆசையும் சஹத்தின் மனதை மாற்றியுள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவர்களிடமும் ஆலோசனை எடுத்துள்ளனர்.;

Update: 2023-02-02 10:13 GMT

திருவனந்தபுரம்:

இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களின் போட்டோஷூட் இப்போது டிரெண்டாகி வருகிறது.

கோழிக்கோடு உம்மலத்தூர் என்ற பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். இதில் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்.

இந்த மூன்றாம் பாலின தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக இவர்கள் உருவெடுத்துள்ளனர்.

தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதை உணர்ந்த இந்த தம்பதி, முதலில் ஒரு குழந்தையை தத்தெடுக்கவே முயன்றுள்ளனர். இருப்பினும், இருவரும் மூன்றாம் பாலினத்தவராக இருந்ததால் சட்ட ரீதியாக அவர்களுக்கு பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

அதன் பின்னரே அவர்களுக்கு இந்த ஐடியா வந்துள்ளது. சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். இருப்பினும், இப்படி செய்தால் ஊர் என்ன பேசும் என்று நினைத்து சஹத் இந்த ஐடியாவுக்கு முதலில் சற்று தயக்கமே காட்டியுள்ளார்.

மேலும், அவர் ஏற்கனவே பெண்ணாக இருந்து ஆணாக மாறியதில் இதில் பல சிக்கல்களும் இருந்தன. இருப்பினும், ஜியாவின் அன்பும், தாயாக வேண்டும் என்ற அவரது தீவிர ஆசையும் சஹத்தின் மனதை மாற்றியுள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவர்களிடமும் ஆலோசனை எடுத்துள்ளனர்.

மருத்துவ ரீதியாக சஹத்தால் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சஹத்திற்கு வேறு எந்தவொரு உடல்நிலை பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அவருக்கு முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது.

அவருக்கு வேறு எந்தவொரு உடல்நிலை பிரச்சினையும் இல்லை என்பது உறுதியான பிறகு இதற்கு தேவையான சிகிச்சை தொடங்கப்பட்டது. ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா மூலம் சஹத் கருவுற்றார். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹாத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. வரும் மார்ச் 4ஆம் தேதி பிரசவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே 8 மாத கர்ப்பத்தில் இருக்கும் சஹாத் ஜோடி இப்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தன்னால் குழந்தை பெற முடியாது என்பதால் சஹத் குழந்தை பெறுவதாகவும் கூறுகிறார் ஜியா.

குழந்தை பிறந்த பிறகு, தாய் பால் வங்கியில் இருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைக்கு தரவும் இவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின ஜோடியான இவர்களில், ஜியா ஒரு நடனக் கலைஞர் ஆவர். சஹத் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்