கர்நாடகத்தில் 40 நாட்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்ய உள்ளேன்

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் 40 நாட்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-02-28 05:15 GMT

மங்களூரு-

சட்டசபை தேர்தல்

கர்டநாக மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன, இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரம், யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவின் துணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் தமிழக பா.ஜனதா தலைவரும், கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் துணை பொறுப்பாளருமான அண்ணாமலை நேற்று ரெயில் மூலமாக காலை 7 மணிக்கு மங்களூரு சென்டிரல் ெரயில் நிலையம் வந்தார். அங்கு அவருக்கு தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்ட பா.ஜனதாவினர் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் மங்களூருவில் தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார். பின்னர் மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வேதவியாஸ் காமத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம்

இதையடுத்து அவர் அங்கிருந்்து கார் மூலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.  பின்னர் அவர் சாமி தரிசனம் செய்தார். கோவில் அருகே உள்ள தங்கத்தேர் முன்பு கோவில் நிர்வாகிகளுடன் அண்ணாமலை புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். கோவிலில் அவர் அன்னதானம் சாப்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் துணை பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.

சட்டசபை தேர்தலுக்காக 40 நாட்கள் தங்கி இருந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். மேலும் இங்குள்ள தமிழர்களை வீதிவீதியாக சென்று சந்தித்து ஓட்டு கேட்க உள்ளேன். பா.ஜ.க. கொண்டு வந்த திட்டங்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி பிரசாரத்தில் ஈடுபடுவேன்.  இவ்வாறு கூறினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் உடுப்பி மாவட்டம் கார்கலாவுக்கு சென்றார். அங்கு மின்சாரத்துறை மந்திரி சுனில் குமார் தலைமையில் நடைபெற்ற பா.ஜ.க. மோட்டார் சைக்கிள் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்