ஒடிசாவில் நிகழ்ந்த பயங்கர ரெயில் விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் - சோனியா காந்தி
ஒடிசாவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்,
ஒடிசாவில் நேற்று இரவு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி நேற்று இரவு 7 மணியளவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது.
ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் உள்பட பல்வேறு துறையினரும் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஒடிசாவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
ஒடிசாவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்; விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.