நான் நேர்மையான நபர்; சி.பி.ஐ. அமைப்பை பார்த்து பயப்படும் ஆள் அல்ல: மணீஷ் சிசோடியா

நான் நேர்மையான நபர் என்றும் சி.பி.ஐ. அமைப்பை பார்த்து பயப்படும் நபர் அல்ல என்றும் மணீஷ் சிசோடியா இன்று பேசியுள்ளார்.

Update: 2022-08-23 11:24 GMT



ஆமதாபாத்,



குஜராத்தில் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதற்கு தயாராகும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாகவும் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் இறங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தின்போது, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டார்.

இதனால், இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களையும் கவரும் வகையிலான வாக்குறுதிகளை வெளியிட்டு மக்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்-மந்திரி சிசோடியா இருவரும் குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆமதாபாத் நகருக்கு நேற்று சென்றனர்.

இதன்பின்பு ஹிமத்நகரில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், குஜராத் மக்கள் அனைவருக்கும் இலவச மற்றும் சிறந்த சுகாதார சிகிச்சைகளை நாங்கள் வழங்குவோம் என உத்தரவாதம் அளிக்கிறோம்.

டெல்லியில் அமைந்துள்ள மொஹல்லா கிளினிக்குகளை போன்று, நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுகாதார கிளினிக்குகள் திறக்கப்படும். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவோம். தேவைப்பட்டால் புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படும் என பேசினார்.

தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அரசு பள்ளிகளில் சீர்திருத்தங்களை செய்துள்ளார். 70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்ய முடியாதவற்றை அவர் செய்துள்ளார்.

அதுபோன்ற நபர், பாரத ரத்னா விருது பெற வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த கல்வி திட்டமும் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு எதிராக சி.பி.ஐ. சோதனையை அவர்கள் நடத்துகின்றனர் என பேசினார்.

சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று 2-வது நாளாக பொதுகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா பேசி வருகின்றனர். இதில், குஜராத்தின் பவ்நகரில் கூட்டத்தில் மக்களிடையே சிசோடியா பேசும்போது, டெல்லியில் நாங்கள் 2 லட்சம் அரசு மற்றும் 10 லட்சம் தனியார் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளோம்.

நாடு முழுவதும் மக்களிடையே விரைவாக அதிகரித்து வரும் இந்த ஆர்வமே, என் மீது சி.பி.ஐ. அமைப்பு பிடியை இறுக்க செய்துள்ளது. நான் நேர்மையான நபர் என கூறி கொள்ள விரும்புகிறேன். நான் சி.பி.ஐ. அமைப்பை பார்த்து பயப்படும் நபர் அல்ல என்றும் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்