பிரதமரை பஸ்மாசுரன் என கூறியதில் 100% உறுதியாக இருக்கிறேன்: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பேட்டி

பிரதமர் மோடியை பஸ்மாசுரன் என கூறியதில் 100% உறுதியாக இருக்கிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உக்ரப்பா பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2022-12-07 09:00 GMT



பெங்களூரு,



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. வி.எஸ். உக்ரப்பா சில நாட்களுக்கு முன் பேசும்போது, பிரதமர் மோடியை பஸ்மாசுரன் என குறிப்பிட்டார். அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமரை ராவணனுடன் ஒப்பிட்டு பேசிய நிலையில், பிரதமரை பஸ்மாசுரன் என உக்ரப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய, பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் சி.டி. ரவி, ஊழல்வாதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி இருக்கிறார். அதனால், அவர்களுக்கு பிரதமர் மோடி பஸ்மாசுரனாக இருக்கிறார். ஆனால், நாட்டு மக்களுக்கு அவர் கடவுள் நாராயணன் போன்று இருக்கிறார்.

ஊழலை பஸ்மம் (எரித்து சாம்பல் ஆக்குவது) செய்வதற்காக பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார் என்றும் ரவி கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வி.எஸ். உக்ரப்பா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நான் பிரதமரை பஸ்மாசுரன் என கூறியதில் 100% உறுதியாக இருக்கிறேன். பிரதமரின் அணுகுமுறையில் எனக்கு சிறு பிரச்சனை உள்ளது.

தேச விரோதிகளுக்கு எதிராக சி.டி. ரவி கூட பஸ்மாசுரன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். அதனால், நானும் அதே போன்று கூறினேன். அதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர், நான் ஏன் அப்படி கூறினேன் என்றால், பிரதமர் என்னென்ன வாக்குறுதிகளை அளிக்கிறாரோ, அவை அனைத்தும் மறைந்து விடுகின்றன.

ஓராண்டில் 2 கோடி வேலைகளை உருவாக்குவேன் என வாக்குறுதி கூறினார். இந்த 8 ஆண்டுகளில், அவர் 16 கோடி வேலைகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், பெருந்தொற்று காலத்தில் நாம் 13 கோடி வேலைகளை இழந்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்