பிரபல சாணக்யா ஆமை 125வது வயதில் உயிரிழப்பு

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த பிரபல சாணக்யா ஆமை தனது 125வது வயதில் உயிரிழந்தது.

Update: 2024-03-18 12:05 GMT

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் கலபகோஸ் வகை ராட்சத ஆமை தனது 125-வது வயதில் உயிரிழந்தது. சாணக்யா என்று அழைக்கப்படும் இந்த ஆமை 1969ல் இந்த பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த பூங்காவில் வசிக்கும் மிகவும் வயதான ஆமையாக இருந்தது. கடந்த 10 நாட்களாக சாணக்யா ஆமை உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து அந்த ஆமை கால்நடை மருத்துவக்குழு தலைவர் டாக்டர் எம்.ஏ.ஹக்கீமின் கண்காணிப்பில் இருந்தது. அந்த ஆமைக்கு உருளைக்கிழங்கு மற்றும் கீரை வழங்கப்பட்ட போதிலும், 10 நாட்களாக சாப்பிடவில்லை என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சாணக்யா ஆமையின் கூண்டை சுத்தம் செய்த உயிரியல் பூங்கா ஊழியர்கள், அது இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆமை உயிரிழந்தது பூங்கா ஊழியர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. பல உறுப்புகள் செயலிழந்ததால் ஆமை உயிரிழந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நேரு உயிரியல் பூங்காவில் கிட்டத்தட்ட 193 வகையான அரிய வகை பறவைகள், விலங்குகள் மற்றும் ஊர்வன உள்ளன. காண்டாமிருகம், யானை, நீலகிரி லாங்கூர், சிங்கவால் மக்காக், சாரஸ் கொக்கு, சாம்பல் பெலிகன் மற்றும் வர்ணம் பூசப்பட்ட நாரை போன்ற அரிய, அச்சுறுத்தும் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களுக்கு இந்த பூங்கா பெயர் பெற்றது. இந்திய மலைப்பாம்பு, இந்திய நட்சத்திர ஆமை, இந்திய மென்மையான ஓடு ஆமை மற்றும் இந்திய பச்சோந்தி ஆகியவையும் இங்கு வளர்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்