கரும்பு விவசாயி சின்னத்தை சுயேட்சைகளுக்கு ஒதுக்கீடு செய்தது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்
ராமநாதபுரம் மற்றும் வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவித்து பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மற்றும் வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம், சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது எப்படி என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், "அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளுக்கு குறிப்பிட்ட கட்சியை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும். அந்த கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் அதே சின்னம் பிரீ சிம்பல் (Free Symbol) ஆக சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நடைமுறையை கடைபிடித்து ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது." என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.