தமிழக கோவில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கோயில் நிதியில் முறைகேடுகள் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்காத நிலையில், மறைமுகமாக கோவில் நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அவ்வாறு கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு மாற்றியதை திரும்ப வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக கோவில்களுக்கு வரும் உண்டியல் காசுகளை முறைப்படுத்த ஏதும் திட்டங்கள் உள்ளதா என்று கேள்வி கேட்ட சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பியது.
அந்த நிதி கல்வி போன்ற சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, மாறாக நிதியை கொண்டு உயர் ரக கார்கள் வாங்குவது போன்ற சொகுசு காரியங்களுக்காக அரசு பயன்படுத்தினால் தவறு எனவும் தெரிவித்துள்ளது.