மும்பை அப்பாவி மக்களின் உயிரைப் பறித்ததற்குக் காரணமானவர்களை எப்படி ஆதரிக்க முடியும் - ஏக்நாத் ஷிண்டே
மும்பை அப்பாவி மக்களின் உயிரைப் பறித்ததற்குக் காரணமானவர்களை எப்படி ஆதரிக்க முடியும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.;
கவுகாத்தி,
சிவசேனா தனது கொள்கைகளுக்கு முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுடன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 20 பேர் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் மராட்டிய மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வித் துறை மந்திரியாக உள்ள உதய் சமந்த். இன்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலை அடைந்து ஏக்நாத் ஷிண்டே முகாமில் சேர்ந்தார். இப்படி அடுத்தடுத்து தொடர் அரசியல் மாற்றங்களால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மும்பையின் அப்பாவி மக்களின் உயிரைப் பறித்ததற்குக் காரணமானவர்களை எப்படி ஆதரிக்க முடியும் என்று சிவசேனாவின் கிளர்ச்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள், தாவூத் இப்ராகிம் மற்றும் மும்பையின் அப்பாவி மக்களின் உயிரைப் பறித்ததற்குக் காரணமானவர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தவர்களை பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனா எவ்வாறு ஆதரிக்க முடியும். அதனால் தான் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்துத்துவ சித்தாந்தத்தைப் பின்பற்றுவதற்கு நாம் இறக்க நேரிட்டாலும், அதையே நமது தலைவிதியாகக் கருதுவோம்" என்று அதில் ஏக்நாத் ஷிண்டே பதிவிட்டுள்ளார்.