சர்வதேச சூதாட்டக்காரரின் மகள் மராட்டிய துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் வீட்டுக்குள் நுழைந்தது எப்படி? சட்டசபையில் அஜித்பவார் கேள்வி

சர்வதேச சூதாட்டக்காரரின் மகள் மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வீட்டுக்குள் நுழைந்தது எப்படி? என்று சட்டசபையில் அஜித்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-03-26 00:16 GMT

ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிசுக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சமீபத்தில் போலீசார் பேஷன் டிசைனர் அனிஷ்கா, அவரது தந்தை அனில் ஜெய்சிங்கானியை கைது செய்தனர். சர்வதேச சூதாட்டக்காரரான அனில் ஜெய்சிங்கானி மீது பல வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளில் இருந்து வெளியேவர அனில் ஜெய்சிங்கானுக்கு உதவி செய்ய வேண்டும் என அவரது மகள் அனிஷ்கா, அம்ருதா பட்னாவிசுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதேபோல மார்பிங் செய்யப்பட்ட படங்கள், வீடியோக்களை காட்டி 2 பேரும் அம்ருதா பட்னாவிசிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

நுழைந்தது எப்படி?

இந்தநிலையில் சர்வதேச சூதாட்டக்காரரான அனில் ஜெய்சிங்கானியின் மகள் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் அரசு பங்களாவுக்குள் நுழைந்தது எப்படி என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் சட்டசபையில் பேசியதாவது:- அம்ருதா பட்னாவிஸ், பேஷன் டிசைனர் தொடர்பாக சட்டசபையில் துணை முதல்-மந்திரி கூறியதை நான் நம்புகிறேன். ஆனாலும் இன்னும் பல கேள்விகள் உள்ளன. நீங்கள் பல ஆண்டுகளாக மாநில உள்துறை மந்திரியாக இருப்பவர். இந்த விவகாரமும் 2, 3 ஆண்டுகளாக நடந்து உள்ளது. அப்படி இருக்கும் போது நிழல் உலகத்துடன் தொடர்புடைய ஒருவரின் மகள் எப்படி உங்களின் வீட்டிக்குள் நுழைய முடியும்?.

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்

சட்டசபையில் அஜித்பவார் பேசுகையில், " ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் தமிழகத்தில் 42 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதுபோன்ற சம்பவம் மராட்டியத்திலும் நடக்கும் வரை மாநில அரசு காத்து இருக்க கூடாது. ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தங்கள் லாபத்துக்காக நடிகர்கள் அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல குடும்பங்களை சீரழிப்பதால் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மாநில அரசு மத்திய அரசின் உதவியை பெற வேண்டும். வேலையில்லாத திண்டாட்டத்தால் பலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஆன்லைன் சூதாட்ட வலையில் விழுந்துவிடுகின்றனர் " என்றாா்.

Tags:    

மேலும் செய்திகள்