3 மாதங்களில் சென்னை உள்பட 43 நகரங்களில் வீடுகள் விலை உயர்வு
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களில் சென்னை உள்பட 43 நகரங்களில் வீடுகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.;
குறிப்பிட்ட 50 நகரங்களில், காலாண்டுக்கு ஒருமுறை, வீடுகளின் விலையில் ஏற்படும் மாற்றத்தை கண்காணித்து, வீட்டு விலை குறியீட்டு எண் தயாரிக்கப்படுகிறது.
அதுபோல், நடப்பு நிதிஆண்டின் (2023-2024) முதலாவது காலாண்டான ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கான வீடுகள் விலை அடிப்படையில் வீட்டு விலை குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை தேசிய வீட்டு வசதி வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட 50 நகரங்களில், 43 நகரங்களில் வீடுகள் விலை உயர்ந்துள்ளது. 7 நகரங்களில் மட்டும் வீடு விலை குறைந்துள்ளது.
43 நகரங்களில் சென்னை உள்ளிட்ட 8 பெருநகரங்களும் அடங்கும். அங்கும் வீடுகள் விலை உயர்ந்துள்ளது.
நகரங்களும், அங்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வருட அடிப்படையில் எத்தனை சதவீதம் விலை உயர்ந்தது என்ற விவரங்களும் வருமாறு:-
ஆமதாபாத்-9.1 சதவீதம், பெங்களூரு-8.9 சதவீதம், சென்னை-1.1 சதவீதம், டெல்லி-0.8 சதவீதம், ஐதராபாத்-6.9 சதவீதம், கொல்கத்தா-7.8 சதவீதம், மும்பை-2.9 சதவீதம், புனே-6.1 சதவீதம்.
வீட்டுக்கடன் அளித்த வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் அளித்த தகவல்கள்படி, 50 நகரங்களிலும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சொத்துகள் மதிப்பீடு 4.8 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 7 சதவீதம் உயர்ந்திருந்தது.
50 நகரங்களிலும், கட்டுமான நிலையில் உள்ள வீடுகள் விலை 12.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும், நகரங்களுக்கு ஏற்ப விலை உயர்வு வேகம் மாறுபடுகிறது. டெல்லி அருகே உள்ள குருகிராமில் விலை 20.1 சதவீதம் உயர்ந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விலை 19.4 சதவீதம் குறைந்துள்ளது.