பெங்களூரு மாநகர் முழுவதும் இரவு 1 மணி வரை ஓட்டல் திறக்க அனுமதி

பெங்களூரு மாநகர் முழுவதும் உள்ள ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணிவரை திறந்திருக்க போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அனுமதி வழங்கி உள்ளார். இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-10-15 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு மாநகர் முழுவதும் உள்ள ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணிவரை திறந்திருக்க போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அனுமதி வழங்கி உள்ளார். இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நள்ளிரவு 1 மணிவரை

பெங்களூருவில் தற்போது இரவு 10 மணி வரையே ஓட்டல்கள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்பு ஓட்டல்கள் நள்ளிரவில் திறந்திருக்க போலீசாரும், அரசும் அனுமதி வழங்காமல் இருந்து வந்தனர். ஆனால் இரவு 10 மணிக்கே ஓட்டல்களை மூடுவதால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறி வந்தனர்.

மேலும் 24 மணிநேரமும் ஓட்டல்கள் திறக்க அனுமதி வழங்கவேண்டும் என்று போலீசாருக்கு, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கேட்டு வந்தனர். ஆனால் 24 மணிநேரமும் ஓட்டல்கள் திறக்க அரசும், போலீசாரும் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், பெங்களூருவில் நள்ளிரவு 1 மணிவரை ஓட்டல்கள் திறந்திருக்க போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொந்தரவு கொடுக்க கூடாது

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெங்களூருவில் நள்ளிரவு 1 மணிவரை ஓட்டல்கள் திறந்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது. நள்ளிரவு 1 மணிவரை ஓட்டல்கள் திறந்திருப்பதால், அந்தந்த மண்டலங்களில் உள்ள ஓட்டல்களுக்கு உரிய பாதுகாப்பை துணை போலீஸ் கமிஷனர்கள் வழங்க வேண்டும்.

நள்ளிரவில் ஓட்டல்கள் திறந்திருந்தால், அதனை அடைக்கும்படி கூறி போலீசார் எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது. இதனை துணை போலீஸ் கமிஷனர்கள் கண்காணிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

24 மணி நேரமும்...

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக என்.எஸ்.மேகரிக் கடந்த 2016-ம் ஆண்டு பணியில் இருந்த போது, நள்ளிரவு 1 மணிவரை ஓட்டல்கள் திறக்க அனுமதி வழங்கி இருந்தார். அதன்பிறகு, சுனில்குமார் போலீஸ் கமிஷனராக பதவி ஏற்ற போது, மெஜஸ்டிக், சேட்டிலைட் பஸ் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மட்டும் 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி இருந்தார்.

ஆனால் கொரோனாவுக்கு பிறகு இரவு 10 மணி அல்லது இரவு 11 மணிக்குள் ஓட்டல்களை மூட போலீசார் உத்தரவிட்டு இருந்தனர். தற்போது பெங்களூரு நகர் முழுவதும் உள்ள ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணிவரை திறந்திருக்க போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு

நள்ளிரவு 1 மணிவரை ஓட்டல்கள் திறந்திருக்க அனுமதி வழங்கி இருப்பதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.சி.ராவ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், பெங்களூருவில் நள்ளிரவு 1 மணிவரை ஓட்டல்கள் திறக்க அனுமதி வழங்கி இருப்பதை வரவேற்கிறேன். இதன்மூலம் ஓட்டல்களில் வியாபாரம் அதிகமாகும். என்றாலும், பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் 24 மணிநேரமும் அனுமதி வழங்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை ஆகும். ஓட்டல்கள் திறந்திருக்கும் நேரத்தை நிர்ணயிப்பதற்கு போலீசாருக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு, கேரள கோர்ட்டுகளில் தீர்ப்பு கூறப்பட்டு இருக்கிறது. எனவே 24 மணிநேரமும் ஓட்டல்கள் திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்