கர்நாடகா அருகே சுங்கச்சாவடியில் பயங்கர விபத்து: ஆம்புலன்ஸ் மோதி 4 பேர் பலி - வீடியோ
உடுப்பி மாவட்டத்தில் உள்ள பைந்தூர் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம், ஹொன்னாவரில் இருந்து குந்தாப்பூர் மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை அவரது மனைவி மற்றும்இரண்டு உறவினருடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பைந்தூர் அருகே உள்ள சுங்கச்சாவடிக்கு வரும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில், சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் வருவதை பார்த்த ஊழியர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அவசர அவசரமாக அகற்ற முயன்றனர்.
அதில் சுங்கச்சாவடிக்கு முன்பு இருந்த 2 தடுப்புகளை அகற்றி விட்டனர். கடைசியாக உள்ள தடுப்பை அகற்ற முயற்சிக்கும் போது ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடி அருகே வந்துவிடுகிறது.
அப்போது வேகத்தைக் குறைக்க பிரேக் போட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சறுக்கி சுங்கசாவடி மீது வேகமாக மோதுகிறது. இதில் ஆம்புலன்சின் உள்ளே நோயாளி மற்றும் உதவியாளர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டனர். தடுப்பை அகற்ற முயன்ற ஊழியரும் விபத்தில் சிக்கினார். இந்த பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.