நேர்மையான பெண் எஸ்.ஐ. என குடியரசு தினத்தில் கவுரவம்; லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட அவலம்

நேர்மையான அதிகாரி என குடியரசு தினத்தில் கவுரவிக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட அவலம் நடந்து உள்ளது.

Update: 2023-03-30 09:36 GMT

சண்டிகர்,

அரியானாவின் பிவானி மாவட்டத்தில் பவானி கேரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முன்னி தேவி. இந்நிலையில், பெண் ஒருவரை மீட்கும் பணியில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்து உள்ளார்.

இந்த வழக்கில் அந்த பெண்ணிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் வேண்டும் என லஞ்சம் கேட்டு உள்ளார். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் அந்த பெண் புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த பெண் அதிகாரியை சரியான தருணத்தில், பிடிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினர் தனிப்படை அமைத்து காத்திருந்தனர். இதற்காக, ஹிசார் மற்றும் பிவானியை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய கூட்டு குழுவினர் செயல்பட்டனர்.

இதன்படி, லஞ்ச பணம் வாங்க முயன்றபோது, முன்னி தேவியை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணமும் கைப்பற்றப்பட்டது.

அரசியல் சாசனம் மற்றும் சட்டம் அளித்து உள்ள உரிமைகளை பற்றி குடிமக்கள் அறிந்து கொள்ளும் பணியை மேற்கொண்டு வரும் தேசிய குற்ற புலனாய்வு வாரியம் (என்.சி.ஐ.பி.) என்ற என்.ஜி.ஓ. அமைப்பு, இதுபற்றிய வீடியோ ஒன்றையும் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது.

சிறந்த முறையில் பணியாற்றியதற்காகவும், நேர்மையான அதிகாரி என்பதற்காகவும் குடியரசு தினத்தில் கவுரவிக்கப்பட்ட அதே அதிகாரிதான் இவர் என்றும் என்.சி.ஐ.பி. தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்