உ.பி.யில் ஆணவ கொலை; ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த உடல்களால் அதிர்ச்சி

உத்தர பிரதேசத்தில் வாலிபர் மற்றும் இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட தகவல் அவர்களது உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக கிடைத்த பின்னர் தெரிந்தது.

Update: 2022-08-29 05:56 GMT



பஸ்தி,



உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் ருதவுலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் அங்கித். வெளியே செல்கிறேன் என கூறிவிட்டு இரவில் சென்றவர் திரும்பி வரவேயில்லை.

இந்த நிலையில், அந்த பகுதியில் கரும்பு தோட்டம் அருகே 18 வயது வாலிபரின் உடல் ஒன்று கிடந்துள்ளது. இதனை கவனித்த தோட்ட உரிமையாளர் பராஸ் நாத் சவுத்ரி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ராம்கிருஷ்ணா மிஷ்ரா தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடக்க கட்ட விசாரணையில், அங்கித் கொல்லப்பட்டது தெரிய வந்தது. அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டன. அங்கித்தின் உடல் அடையாளம் காணப்பட்ட பின்பு, அவரது வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், அந்த கிராமத்தில் இர்ஷாத் மற்றும் இர்பான் என்பவரின் வீட்டில் அங்கித் டிராக்டர் ஓட்டும் பணியில் ஈடுபட்ட வந்த விவரம் அவரது தந்தை கூறியதன் பேரில் தெரிய வந்தது. இரவு வீட்டை விட்டு சென்ற அங்கித்தின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது.

இதனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். அங்கித்தின் சகோதரர் கூறும்போது, இர்ஷாத் மற்றும் இர்பானின் வீட்டுக்கு அங்கித் சென்றார் என கூறியுள்ளார்.

இதனையடுத்து இர்ஷாத் வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இரவில் இர்ஷாத்தின் சகோதரியும் மர்ம மரணம் அடைந்தது தெரிய வந்தது. அவரை புதைத்து உள்ளனர். இதில் ஆணவ கொலை நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது என கூறப்படுகிறது.

இதனை அறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் இருவரையும் கொலை செய்துள்ளனர். இளம்பெண்ணின் உடலை புதைத்து விட்டு, வாலிபரின் உடலை கரும்பு தோட்டம் அருகே வீசி விட்டு சென்றுள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என ஏ.எஸ்.பி. சவுத்ரி கூறியுள்ளார்.

சம்பவம் பற்றி அறிந்து, கிராமத்தினர் திரண்டு விட்டனர். இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்பின்னர் இரு உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் என ஏ.எஸ்.பி. சவுத்ரி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்