சோழர், பாண்டியர், பல்லவர்களை வரலாற்று அறிஞர்கள் புறக்கணித்தனர்- அமித்ஷா குற்றச்சாட்டு

வரலாற்று அறிஞர்கள் முகலாயர் வரலாற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். சோழர், பாண்டியர், பல்லவர் வரலாற்றை புறக்கணித்தனர் என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்.

Update: 2022-06-11 19:12 GMT

பாண்டியர்கள்

டெல்லியில், மகாராணா பற்றிய புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, புத்தகத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

வரலாற்று அறிஞர்களுக்கு நான் சிலவற்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் எண்ணற்ற பேரரசுகள் இருந்தன. ஆனால், நீங்கள் முகலாயர்கள் மீது மட்டும் கவனம் செலுத்தி, அவர்களை பற்றி மட்டுமே அதிகமாக எழுதி இருக்கிறீர்கள்.

பாண்டிய பேரரசு, 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அகோம் பேரரசு, அசாமை 650 ஆண்டுகள் ஆண்டது. அவர்கள் அவுரங்கசீப்பை கூட தோற்கடித்தனர். பல்லவ பேரரசு, 600 ஆண்டுகள் ஆட்சி செய்தது. சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

உண்மை வெளிவரும்

மவுரியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இலங்கைவரை 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சாதவாகனர்கள் 500 ஆண்டுகளும், குப்தர்கள் 400 ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். ஆனால் அவர்களை பற்றி எந்த புத்தகமும் இல்லை.

இந்த பேரரசுகளை பற்றி புத்தகங்கள் எழுதப்பட வேண்டும். அப்படி எழுதினால், நாம் தவறென்று நம்பும் வரலாறு படிப்படியாக மங்கி, உண்மை வெளிவரும். அதற்கான பணியை பலர் தொடங்க வேண்டும்.

விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு, நமது புகழ்பெற்ற வரலாறு பொதுமக்கள் முன்பு வைக்கப்பட வேண்டும்.

நாமே எழுதுவோம்

உண்மையை எழுதுவதில் இருந்து நம்மை யாரும் தடுக்க முடியாது. நாம் சுதந்திர நாடு. நமது சொந்த வரலாற்றை நாமே எழுதுவோம். சிலர் ஏமாற்றம் அளிக்கும்வகையில் வரலாறு எழுதி உள்ளனர். ஆனால், இந்தியாவில் ஏமாற்றம் நீடிக்காது. 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் ஆனாலும், இறுதியில் உண்மை வெற்றி பெறும்.

வரலாற்றை எழுத மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், அரசு எழுதும்போது சில நெருக்கடிகள் வரலாம். சுதந்திரமான வரலாற்று அறிஞர்கள் எழுதும்போது உண்மை மட்டுமே வெளிவரும். எனவே, நம் மக்கள், விமர்சனங்களை முன்வைக்காமல், உண்மையை மட்டும் புத்தகமாக எழுத வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்