'இந்து' என்ற சொல் எங்கிருந்து வந்தது? நான் கூறியது தவறு என நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்: காங்கிரஸ் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி
'இந்து' என்ற சொல் எங்கிருந்து வந்தது என்பதை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்து என்ற சொல் இந்தியாவுக்கு சேர்ந்தது அல்ல என்று பேசினார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சதீஸ் ஜார்கிகோளி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "பாஜக., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்து, இந்துத்துவா என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் இந்து என்ற சொல் பெர்சியாவை சேர்ந்தது. அந்த சொல் ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தது.
இந்து சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இந்து என்ற சொல்லின் அர்த்தம் மோசமானது. அந்த சொல் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள இணையத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். இந்து என்ற சொல் இந்தியாவுக்கு சேர்ந்தது அல்ல " என்று பேசினார்.
சதீஸ் ஜார்கிகோளியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்துக்களை அவமதிப்பதாகவும் ஆத்திரமூட்டுவதாகவும் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
"இந்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சிக்கும் இந்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் ஆதரிக்கிறது, அவருடைய கருத்தை ஏற்கவில்லை" என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கூறினார்.
இந்த நிலையில், தனது சர்ச்சை பேச்சு குறித்து இன்று சதீஸ் ஜார்கிகோளி கூறுகையில், "நான் தவறு செய்தேன் என்பதை அனைவரும் நிரூபிக்கட்டும். நான் தவறு செய்திருந்தால், நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன், என் கருத்துக்காக மன்னிப்பு கேட்பேன்" என்று தெரிவித்தார்.