'குர் ஆன்' ஓதி தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம்

பேளூரில் உள்ள சன்னகேஸ்வரா கோவில் தேரோட்டத்தை ‘குர் ஆன்’ ஓதி தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டானது.

Update: 2023-03-28 22:03 GMT

ஹாசன்:-

சன்னகேஸ்வரா கோவில்

ஹாசன் மாவட்டம் பேளூரில் சன்னகேஸ்வரா சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டு திருவிழா நடத்தப்பட்டு, தேரோட்டம் நடைபெறும். இது மிகவும் பிரசித்திபெற்றதாகும். கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தேரோட்டத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதில் வினோதம் என்னவென்றால் இக்கோவில் தேரோட்டத்தின்போது பேளூர் தாலுகா தொட்டமேதூரு கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் 'குர் ஆன்' ஓதுவார்.

அதன்பின்னரே தேரோட்டம் தொடங்கும். இது பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஒரு நிகழ்வாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக கோவில் நிர்வாகத்தினர் முறைப்படி தேரோட்டத்தை தொடங்கி வைக்க முஸ்லிம் பிரமுகரான சையது சஜ்ஜாத் பாஷாவை அழைக்க வேண்டும். ஆனால் இதுவரையில் யாரும் அவரை நேரில் சென்று அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்து அமைப்புகள் அவரை அழைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது. மேலும் அவர்கள் நேற்று கோவில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு ஒரு முஸ்லிம் வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திடீரென போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இந்து அமைப்பினரை பார்த்து 'குர் ஆன் ஜிந்தாபாத்' என்று தொடர்ந்து கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இந்து அமைப்பினருக்கும், முஸ்லிம் வாலிபருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் தள்ளுமுள்ளும் உண்டானது.

இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். மேலும் முஸ்லிம் வாலிபரை போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பதற்றம்

இதற்கிடையே போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து இந்து அமைப்பினர் திடீரென அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிடத்திற்கும் மேலாக அவர்கள் சாலை

மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் உண்டானது. பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாசில்தார் மமதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது போராட்டக் காரர்களின் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்