மதம் மாறி காதலித்ததால் இளைஞன் வெட்டிக்கொலை - பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்
மதம் மாறி காதலித்ததால் பெண்ணின் சகோதாரர்களால் இளைஞன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் பீமாநகரை சேர்ந்த இளைஞன் விஜய காம்பிளி (வயது 25). இந்து மதத்தை சேர்ந்த காம்பிளியும் அதே பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரின் காதலுக்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு பீமாநகர் பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே விஜய காம்பிளி சென்றுகொண்டிருந்தபோது அவரை இடைமறித்த பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினர்கள் தங்கள் வீட்டு பெண்ணை காதலிப்பதை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.
அப்போது, காம்பிளிக்கும் பெண்ணின் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் வீட்டார் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் காம்பிளியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
கும்பல் வெட்டியதில் படுகாயமடைந்த காம்பிளி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காம்பிளியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரன் ஷஹபிதுல்லா (19 வயது) மற்றும் நவாஸ் (19 வயது) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் எஞ்சியோரை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த கொலையையடுத்து, அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.