டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவாலை கண்டித்து இந்து, சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து, சீக்கிய அகதிகள் வலியுறுத்தினர்.;

Update: 2024-03-14 10:18 GMT

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும் அந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

இந்த நிலையில், சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

இதனிடையே இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சி.ஏ.ஏ. குறித்து பேசுகையில், "ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதன் மூலம் பா.ஜ.க. தங்களுக்கான ஒரு வாக்கு வங்கியை உருவாக்க முயல்கிறது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறுபவர்களுக்கு இங்கு வேலை மற்றும் வீடுகள் வழங்கப்படும். அது இங்குள்ள உள்ளூர் மக்களை பாதிக்கும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இந்து, சீக்கிய அகதிகள் டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனது பேச்சுக்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், "மோடி அரசாங்கம் எங்களுக்கு குடியுரிமை வழங்கும்போது, இவர்களுக்கு வேலை மற்றும் வீடுகளை யார் கொடுப்பார்கள்? என்று கெஜ்ரிவால் கேட்கிறார். அவருக்கு எங்கள் வலி புரியவில்லை" என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்