இமாசல பிரதேசம்; அரசு கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் மோதல்: வைரலான வீடியோ
இமாசல பிரதேசத்தில் அரசு கல்லூரி ஒன்றில் இரு தரப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் அடித்து, மோதி கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.;
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் சிம்லா நகரில் கொத்ஷேரா பகுதியில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களில் ஒரு பிரிவினர் இருக்கைகளில் அமர்ந்திருக்கும்போது, மற்றொரு பிரிவு மாணவர்கள் கைகளில் கம்புகளுடன் அந்த பகுதிக்கு வருகின்றனர்.
இதனால், மாணவிகள் சிலர் நடந்து வேறு பகுதிக்கு செல்கின்றனர். இதனை தொடர்ந்து கம்புகள், தடிகளை வைத்திருந்தவர்கள் மற்றொரு தரப்பினர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். சில மாணவர்கள் அதனை வேடிக்கை பார்த்தபடி ஓரத்தில் நின்றனர்.
அவர்களுக்கும் அடி விழுந்துள்ளது. மாணவிகளுக்கும் கூட அடி விழுந்துள்ளது. இதுபற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன. இதுபற்றி சிம்லா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த தாக்குதலில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) ஆகிய இரு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மோதி கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.