இமாச்சல பிரதேசம்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.;

Update: 2024-03-23 09:21 GMT

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதனால் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, மாற்றி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கடந்த பிப்ரவரி 29-ந்தேதி தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 68 இடங்கள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 39 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், 6 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 33 ஆக குறைந்துள்ளது. அதே சமயம் பா.ஜ.க.வுக்கு 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளன.

இதனிடையே மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆஷீஷ் சர்மா, ஹோஷியார் சிங் மற்றும் கே.எல்.தாக்கூர் ஆகிய 3 பேரும் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் 3 பேரும் பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுதிர் சர்மா, ரவி தாக்கூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லகன்பால், சைதன்யா சர்மா மற்றும் தேவிந்தர் குமார் பூட்டோ ஆகிய 6 பேரும் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். டெல்லியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், இமாச்சல பிரதேச பா.ஜ.க. தலைவர் ராஜீவ் பிண்டல் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதையடுத்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. இதனால் மாநில மக்கள் மிகுந்த கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே மாநிலங்களவை தேர்தலில் இந்த 6 பேரும் பா.ஜ.க.விற்கு வாக்களித்தனர். இன்று இவர்கள் பா.ஜ.க.வில் இணைந்திருப்பது கட்சியை மேலும் வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்