இமாசல பிரதேசம்: வெள்ள பாதிப்புக்கு 118 பேர் உயிரிழப்பு; வருவாய் மந்திரி தகவல்

இமாசல பிரதேசத்தில் வெள்ள பாதிப்புக்கு 118 பேர் உயிரிழந்து உள்ளனர் என வருவாய் மந்திரி கூறியுள்ளார்.

Update: 2023-07-17 16:18 GMT

சிம்லா,

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், டெல்லி, இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இமாசல பிரதேசத்தில், வெள்ளத்தில் சிக்கி தவித்த 2 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை இணைந்து நடத்திய மீட்பு பணியில் வெளிநாட்டினரும் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இமாசல பிரதேசத்தின் வருவாய் துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறும்போது, கனமழையால் மாநிலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி சுக்கு பேரிடர் மேலாண் பணியை அவரே நேரிடையாக கவனித்து வருகிறார். இதுவரை 118 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

500 வீடுகள் வரை சேதமடைந்து உள்ளன. வீட்டை சுற்றி நிறைய மணல் குவிந்து கிடக்கிறது. இடிபாடுகளை நீக்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகள் அழிந்து போயுள்ளன. நிலைமையை பற்றி மதிப்பீடு செய்ய மத்திய அரசு 3 குழுக்களை அனுப்பும் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்