இமாச்சல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் ராஜினாமா
இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்-மந்திரி பதவியில் இருந்து ஜெய்ராம் தாக்கூர் விலகினார்.
சிம்லா,
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், மாலை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. ஆளும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த அவர், பதவியில் இல்லாவிட்டாலும் மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன் என்றார்.
பாஜக தோல்வி அடைந்துள்ள நிலையில், சில விஷயங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டி உள்ளது. சில பிரச்சினைகள் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுபற்றி விளக்கம் கேட்டு மேலிடம் அழைத்தால் டெல்லி செல்வேன் என்றும் ஜெய்ராம் தாக்கூர் கூறினார்.
இமாச்சல பிரதேச சட்டபை தேர்தலில் போட்டி வேட்பாளர்களால் பாஜக வெற்றியை இழந்ததாக கூறப்படுகிறது. கின்னவுர், நலகர், குலு, பஞ்சார், தர்மசாலா, டெஹ்ரா ஆகிய 6 தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதற்கு காரணம் பாஜகவில் இருந்து வெளியேறியவர்களால் தான் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.