கர்நாடகத்தில் 'ஹிஜாப்' தடை தொடரும் - கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி

ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ள நிலையில், கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-10-13 21:08 GMT

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.

கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் தரப்பில் 23 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் நடைபெற்றது. கர்நாடக அரசு தரப்பிலும், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.

பரபரப்பான வாதங்கள்

கர்நாடக அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். குறிப்பாக, ''உடுப்பியில் உள்ள கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு மாணவிகள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்ற முடிவை எடுத்தது. இந்த சீருடை என்பதில் ஹிஜாப் வராது என்பதால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர். மாணவிகளை சில அமைப்புகள் தூண்டி விடுகின்றன. ஹிஜாப் அணிய தடை விதித்தது நடுநிலையான உத்தரவே ஆகும்'' என்று வாதிட்டார்.

அதேபோல், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர். 10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 22-ந்தேதி ஒத்திவைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கவனம் பெற்றது.

மாறுபட்ட தீர்ப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கி அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று நீதிபதி சுதான்சு துலியா, ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் உரிய நடவடிக்கைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இந்த மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக இந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.

மந்திரி பேட்டி

இதுகுறித்து கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 2 பேர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு வழங்கினாலும் நாங்கள் அதற்கு தலை வணங்குவோம். தற்போது 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதனால் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு செல்கிறது. அங்கு தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்.

போலீஸ் பாதுகாப்பு

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையொட்டி பதற்றமான பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உத்தரவிட்டோம். சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும் வரை கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு அமலில் இருக்கும். அதாவது மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராவதற்கான தடை நீடிக்கும். கர்நாடக கல்வி சட்டத்தின்படி பள்ளி-கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் மத அடையாள உடைகளை அணிந்து வர முடியாது. கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்படி பள்ளி-கல்லூரிகள் செயல்படும். அதன்படி குழந்தைகள் பள்ளி-கல்லூரிகளுக்கு வர வேண்டும். வகுப்பில் எந்த மாணவியும் ஹிஜாப் அணிந்து ஆஜராக கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

நாங்கள் காத்திருப்போம்

இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறுகையில், "ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (நேற்று) தீர்ப்பு கூறியுள்ளது. 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். அதனால் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு செல்கிறது. அங்கு தீர்ப்பு வரும் வரை நாங்கள் காத்திருப்போம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்