6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையில் கட்டணம் வசூல்: நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகள் அகற்றப்படும்மத்திய மந்திரி கட்காரி அறிவிப்பு

நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும். அவற்றுக்குப் பதிலாக 6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.;

Update: 2023-03-24 22:45 GMT

புதுடெல்லி, 

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

நாட்டில் நெடுஞ்சாலைகளில் தற்போது உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றவும், அவற்றுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜி.பி.எஸ். அடிப்படையிலான அந்த தொழில்நுட்பம், அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும்.

இதன் மூலம் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெருக்கடி குறையும். வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலையில் பயணித்த தூரத்துக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும்.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சுங்க கட்டண வருவாய் தற்போது ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ளது. அது 2, 3 ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயரும்.

தரத்தில் சமரசம் செய்யாமல் சாலை அமைக்கும் செலவைக் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளுக்கு பதிலாக, வாகனங்களை நிறுத்தாமல் கட்டணம் வசூலிப்பதற்கான முன்னோடி திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, வாகன நம்பர் பிளேட்களை பதிவு செய்து அறியும் கேமராக்கள் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்படும்.

நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் சராசரியாக 8 நிமிடங்களாக இருந்த வாகனங்களின் காத்திருப்பு நேரம், 'பாஸ்ட் டாக்' அறிமுகத்துக்குப் பிறகு 47 வினாடிகளாக குறைந்துள்ளது.

ஆனால் இன்றும் பல சுங்கச் சாவடிகளில், குறிப்பாக நகரங்களை ஒட்டிய சுங்கச் சாவடிகளில் நெரிசல் நேரங்களில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால்தான் புதிய முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்