இடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் மனு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
இடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.;
புதுடெல்லி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், ஹேமந்த் சோரனை அதிரடியாக கைது செய்தனர். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு முதல்-மந்திரி பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த சோரன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், தேர்தல் பிரசார பணிகளுக்காக ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். இந்த மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்ட நிலையில், நீதிபதிகள் இந்த வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை வரும் 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.